பாகிஸ்தான், 22 ஜனவரி (பெர்னாமா) -- கராச்சியில் உள்ள ஒரு பேரங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
பல மாடிகளைக் கொண்ட அக்கட்டிடத்தின் ஒரு கடையில் இருந்து குறைந்தது 30 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்க தேடல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி சைட் அசாட் ராசா கூறினார்.
மீட்புப் பணிகள் அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றப்படுகின்றன.
சேதமடைந்த கட்டமைப்பில் புகை மற்றும் வெப்பம் இருப்பதால் மீட்புப் பணியாளர்கள் கட்டிடத்தின் சில பகுதிகளை அடைவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக சைட் அசாட் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் பல கோணங்களில் இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக கராச்சி ஆணையர் சைட் ஹசான் நாக்வி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)