Ad Banner
 பொது

முதல் தானியங்கி அஞ்சல் வாகனம்: போஸ் மலேசியா வரலாற்று சாதனை

21/01/2026 05:22 PM

ஷா ஆலாம், ஜனவரி 21 (பெர்னாமா) -- மலேசியாவில், அஞ்சல் பொருள்களைக் நிர்வகிக்கும் முதல் தானியங்கி வாகனத்தை அறிமுகப்படுத்தி போஸ் மலேசியா (Pos Malaysia) நிறுவனம், வரலாறு படைத்துள்ளது.

இது நாட்டின் தளவாடத் தொழில்துறை உருமாற்றத்தில், விவேகமான மற்றும் நிலையான தொழில்நுட்பப் பயன்பாட்டை நோக்கிய மிக முக்கிய நடவடிக்கையாகும்.

இத்தானியங்கி வாகன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், Pos Malaysia ஊழியர்கள் தங்களின் வேலையை இழக்க நேரிடாது என்று, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''இது போஸ் மலேசியா ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வழிவகுக்குமா? நான் நேரடியாகவே கூறுகிறேன். இல்லை. இல்லை என்பதே பதில். அனுமதிக்கப்படாது. ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது எனது நோக்கமல்ல. மாறாக, உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த மனநிலையும் புதிய சிந்தனை முறையும்தான் நமக்குத் தேவை,'' என்றார் அவர்.

புதன்கிழமை, ஷா ஆலமில் நடைபெற்ற மலேசியாவின் முதல் தானியங்கி வாகனத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி, நாட்டின் விவேக தளவாட எதிர்காலத்தை நோக்கிய, ஒரு தொடக்க நடவடிக்கையாக கருதப்படுவதாக டத்தோ ஃபஹ்மி கூறினார்.

தானியங்கி வாகனத் தொழில்நுட்பம் ஏற்கனவே பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், விவேகமாகப் பயன்படுத்தினால், அது செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பினரின் அங்கீகாரத்தையும் பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)