Ad Banner
 பொது

மைய மதிப்பீட்டுத் தேர்வில் தமிழ் & சீனமொழி பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன

21/01/2026 08:13 PM

கோலாலம்பூர், ஜனவரி 21 (பெர்னாமா) -- ஆரம்பப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப்பள்ளிகளின், மைய மதிப்பீட்டுத் தேர்வில் தமிழ்மொழி மற்றும் சீனமொழி பாடங்கள் இணைக்கப்
பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2026 முதல் 2035ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தப்படி, மைய மதிப்பீட்டுத் தேர்வில், தமிழ்மொழி தொடர்ந்து ஒரு பாடமாக இடம்பெறும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பள்ளியில் மலாய் மொழி, ஆங்கில மொழி, அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்ப்பள்ளிகளில் நான்கு பாடங்களுடன் சேர்த்து தாய்மொழியான தமிழ்மொழியும் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சீனப்பள்ளிகளில் சீனமொழி உட்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், இடைநிலைப்பள்ளியில் மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய ஐந்து பாடங்களோடு கூடுதலாக தமிழ்மொழி மற்றும் சீனமொழி பாடங்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றன.

இப்பாடங்கள் அனைத்துக்கும், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேர்வு வாரியம், தேர்வு தாள்களைத் தயார் செய்யும்.

எனவே, இந்த புதியத் திட்டத்தில், இந்திய மாணவர்கள் தமிழ்மொழியைப் பயில மாட்டார்களா என்ற கேள்விக்கு இடமில்லை என்று வோங் கா வோ விவரித்தார்

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)