கோலாலம்பூர், 21 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டின் கல்வித்துறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று அதன் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செய்தார்.
அதில், ஆரம்பக் கல்வியில் சேரும் மாணவர்களின் புதிய வயது மாற்றம் மற்றும் நான்காம் வகுப்பில் புதிய சோதனையை அறிமுகப்படுத்துவது ஆகியவையும் அடங்கும்.
மாணவர்களின் பருவ வளர்ச்சிக்கு ஏற்றதாக கருதப்படும் இம்மாற்றம், கல்வி தரம் மற்றும் கற்றல் முறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் உட்பட அவர்களின் எதிர்கால முன்னேற்றங்களில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பகிர்ந்து கொள்கின்றார், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சார்புநிலை பேராசிரியர் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரன்.
அடுத்தாண்டு தொடங்கி பாலர் பள்ளியில் ஐந்து வயதிலும், முதலாம் வகுப்பில் ஆறு வயதிலும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
ஆறு வயது நிரம்பிய மாணவர்கள் முதலாம் ஆண்டில் தங்களின் கல்வியைத் தொடர உடலளவிலும், உளவியல் அடிப்படையிலும் தயாராக இருப்பதை ஆய்வுகள் காட்டுவதைப் பேராசிரியர் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
பல நாடுகள் இத்திட்டத்தை முன்னதாகவே அமல்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள பெற்றோர்களும், மாணவர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
''ஆறு வயது நிரம்பிய மாணவர்கள் உடல் கூறு அடிப்படையிலும் உளவியல் அடிப்படயிலும் கல்வி கற்க தயாராக இருக்கின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது முன்னதாக பல நாடுகளில் அமலாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, அமெரிக்காவில் ஆறு வயது நிரம்பிய மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்து நீண்ட காலமாகவே படித்து வருகின்றார்கள். ஆகவே, இதனை செய்வதற்கு நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.
அதோடு, இக்கொள்கையைச் செயல்படுத்துவது கட்டாயமில்லை என்றும், பிள்ளைகளின் தயார் நிலையைப் பொருத்து பெற்றோர்கள் தங்கள் முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, பள்ளி நிர்வாகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பேராசிரியர் இராஜேந்திரன் கோடிகாட்டினார்.
''இதை பெற்றோர்களின் முடிவுக்கு விட்டுவிடுவது என்பது பள்ளி நிர்வாகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான ஏற்பாடு, ஆசிரியர்களின் தயார்நிலையில் அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, இதை படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் செய்ய வேண்டும். செய்தால் சிறப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்'', என்றார் அவர்.
2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்டம் ஆர்.பி.என் அமல்படுத்தப்பட்டு கடந்தாண்டோடு நிறைவுப் பெற்ற நிலையில், 2026 முதல் 2035-ஆம் ஆண்டு வரைக்குமான புதிய கல்வி திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியபோது பிரதமர் இந்த அறிவிப்பையும் செய்திருந்தார்.
இதனிடையே, இவ்வாண்டு தொடங்கி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மைய மதிப்பீட்டுத் தேர்வு மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதைத் தாம் முழு மனதுடன் வரவேற்பதாக, பேராசிரியர் டத்தோ முனைவர் என். எஸ். இராஜேந்திரன் கூறினார்.
''நான்கு ஆண்டு கல்வி கற்ற பிறகு மாணவர்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கு இது நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். அடுத்து இருக்கக்கூடிய இரண்டு ஆண்டுகள், ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டுகளில் மாணவர்களுக்குத் தேவையான சிறப்பு பயிற்சிகளை வழங்குவதற்கும், குறைநீக்கல் போதனை கற்றல் கற்பித்தலை நடத்துவதற்கும், அவர்களைப் படிவம் ஒன்று செல்வதற்குத் தயார் செய்வதற்கும் இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஆகவே, இந்தத் தேர்வு முடிவுகள் ஒரு நல்ல பயனாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்'', என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெற்றோருடைய ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவது பள்ளி நிர்வாகத்தின் முக்கிய கடப்பாடு என்பதால் எவ்வித பாராபட்சமின்றி வெளிப்படையாக மற்றும் நம்பகத்தன்மையுடன் பள்ளி அளவிலான மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
''இதனை மேற்கொள்வதற்கு அனைத்து ஆசிரியர்களும் அடிப்படை ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தாலும் கூட அவர்களுக்குப் பள்ளி அளவிலான திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகள் உட்பட வகுப்பறை அளவிலான மதிப்பீடுகளைத் தொடர்ந்து செய்வதற்கும், இன்றைய நவீன முன்னெடுப்புகளுக்கு மத்தியில் மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அவர்களைத் தயார் செய்வதற்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.
அதேவேளையில், மலாய்மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் என நான்கு பாடங்களை உள்ளடக்கி மைய மதிப்பீட்டுத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி பாடத்தையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)