கோலாலம்பூர், ஜனவரி 21 (பெர்னாமா) -- ஐ.ஜே.எம் Corporation நிறுவனத்திற்கு தொடர்புடைய Ops Heart வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று நான்கு வெவ்வேறு இடங்களில் ஆய்வுகள் மற்றும் சோதனைகளை நடத்தியது.
நிர்வாக சிக்கல்கள், கொள்முதல் செயல்முறைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சுமார் 250 கோடி ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்களின் உரிமை தொடர்பான விசாரணையில், ஐ.ஜே.எம்-இன் உயர் நிர்வாக அதிகாரி ஒருவரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட, அச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு கோடியே 58 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 55 தனியார் வங்கிக் கணக்குகளையும், விசாரணையில் தொடர்புடைய நிறுவனக் கணக்குகளையும் எஸ்.பி.ஆர்.எம் முடக்கியுள்ளது.
கூடுதலாக, கள்ளப்பண பறிமாற்ற நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிற சொத்துக்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்வதற்கான முயற்சிகளிலும், விசாரணை கவனம் செலுத்துகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இரண்டு உயர் நிர்வாக அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணி நேற்று தொடங்கியதாகவும், அதன் விசாரணை இன்றும் தொடரப்படும் என்று எஸ்.பி.ஆர்.எம் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று மேலும் ஐந்து சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)