புத்ராஜெயா, 20 ஜனவரி (பெர்னாமா) -- இதனிடையே, நாட்டின் ஆரம்ப கல்வி முறையில் சேரும் புதிய வயது மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஆறு வயது சிறார்களின் உளவியல் மற்றும் உணர்வு அடிப்படையிலான தயார்நிலையைப் பொறுத்தே, முன்கூட்டியே பள்ளிக்குச் செல்லும் அமலாக்கத்தைத் தன்னார்வ முறையில் மேற்கொள்ள கல்வி அமைச்சு ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.
இது கட்டாயமில்லை என்பதோடு, குழந்தைப் பருவ வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யத் தயாராக உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மட்டுமே உள்ளடக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
தயார்நிலையின் அளவை உறுதி செய்யும் வகையில், கல்வி, சமூக மற்றும் உணர்ச்சி அம்சங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டுத் தேர்வுகளை கல்வி அமைச்சு நடத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
''எனவே இவ்வாண்டு அனைத்து தரவு சேகரிப்பையும் நடத்த ஒரு தேதியை நிர்ணயிப்போம். மலேசியா முழுவதும் எத்தனை ஆறு வயது சிறார்கள், ஆறு வயது சிறார்கள் உள்ள எத்தனை பெற்றோர் என்பதைக் கணக்கிடுவோம். நாங்கள் ஒரு சோதனை நடத்துவோம். பின்னர் தயாராக இருக்கும் பெற்றோர் இந்தச் சிறார்களைப் பதிவு செய்வதற்கான செயல்முறையைத் தொடரலாம். பின்னர் அவர்கள் 2027-இல் முதலாம் ஆண்டில் நுழைவார்கள். மீண்டும், அச்சம் கொள்ள வேண்டாம். உங்கள் பிள்ளைகளை நீங்களே பாருங்கள். பிள்ளைகள் எங்களை அடையாளம் காண உதவுங்கள்,'' என ஃபட்லினா சிடேக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)