Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

குற்றச்சாட்டை மறுத்தார் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி

17/03/2026 02:39 PM

நிபோங் திபால், 17 மார்ச் (பெர்னாமா) --  கடந்தாண்டு, தமது Instagram பக்கத்தில் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சமூக ஆர்வலர் அருண் துரைசாமி மறுத்தார்.

இன்று பினாங்கு, ஜாவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அதனை மறுத்த அருண் துரைசாமி விசாரணை கோரினார்.

பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் இழைக்கத் தூண்டும் வகையில் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமது சொந்த Instagram பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டதாக 56 வயதான அருண் துரைசாமி மீது குற்றம் பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு மார்ச் 12-ஆம் தேதி, மதியம் மணி 3.45 அளவில் தெற்கு செபிராங் பிராய் மாவட்டத்தின் பத்து காவான் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

இந்து மதத்தின் விழாவைக் கேலி செய்வது போல மூன்று உள்ளூர் வானொலி தொகுப்பாளர்கள் வெளியிட்ட காணொளி மற்றும் சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வீதிகளில் போராட்டம் நடத்த மலேசிய இந்து ஆகம அணிக்கு அழைப்பு விடுப்பதைப் போல அவரின் அறிக்கை அமைந்திருந்தது.

இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம், சட்டம் 574 செக்‌ஷன் 505(b)-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

இதனிடையே, 5,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அருண் துரைசாமியை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)