புத்ராஜெயா, 08 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இன்னும் ஆறு மாதங்களுக்குள், புதிய தோற்றமுடைய அனைத்துலக கடப்பிதழ் மற்றும் மைகார்ட் அட்டையை மலேசியா அறிமுகப்படுத்தும்.
புதிய ஆவணத்தின் அறிமுகம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறிய உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், தற்போது மலேசிய கடப்பிதழ், உலகின் மிகவும் நம்பகமான கடப்பிதழ்களில் ஒன்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
''மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் பயணம் செய்ய விசா ஒப்புதல் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில், நமது கடப்பிதழ் ஆவணம் தற்போது மூன்றாவது மிகவும் நம்பகமான ஆவணமாக இருப்பதால் அது முக்கியமானது. அது ஒரு முக்கியமான அளவுகோல்.நேற்று குடிநுழைவு தலைமை இயக்குநர் மற்றும் கே.எஸ்.யு ஆகியோரால் எனக்கு, கடப்பிதழ்களின் நம்பகத்தன்மையின் நிலை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஆகவே, ஆறு மாதங்களில் மலேசியர்களுக்கு புதிய தோற்றமுள்ள கட்டபிதழ் கிடைக்கும்,'' என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் ஊழியர்களுக்கு புத்தாண்டு உரையாற்றிய பின்னர், செய்தியாளர் சந்திப்பில் சைஃபுடின் அத்தகவலைக் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட கால பயன்பாட்டிற்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்திற்கு ஏற்ப, கட்டபிதழ் மற்றும் மைகார்ட் அடையாள அட்டை ஆகியவற்றின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக அந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)