Ad Banner
 பொது

வெடிபொருளை பயன்படுத்தியதாக சந்தேக நபர் மீது நாளை ஐந்து குற்றச்சாட்டுகள்

08/01/2026 03:52 PM

நீலாய், 08 ஜனவரி (பெர்னாமா) -- டிசம்பர் 22-ஆம் தேதி நீலாய், டேசா பல்மாவில் சுயமாக தயாரித்த வெடிபொருள், ஐ.ஈ.டி-ஐ பயன்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்.

60 வயதான அந்த உள்நாட்டு ஆடவர், இன்னும் சிகிச்சை பெற்று வருவதால், நாளை துவாங்கு ஜஃபார் சிரம்பான் மருத்துவமனை, எச்.டி.ஜே.எஸ்-இல் குற்றம் சாட்டப்படவிருப்பதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜொஹாரி யஹ்யா தெரிவித்தார்.

1958-ஆம் ஆண்டு அரிக்கும் மற்றும் வெடி பொருள்கள் மற்றும் ஆபத்தான ஆயுதச் சட்டம், செக்‌ஷன் 3-இன் கீழ், அச்சந்தேக நபர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

காயத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்த, வெடிபொருள்களை வைத்திருந்ததாக நியாயமான சந்தேகம் எழும் நிலையில், அவர் மீது அக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவிருக்கிறது.

சந்தேக நபர் மீது அதே சட்டம், செக்‌ஷன் 4-இன் கீழும், பொது வாகனத்திற்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு வெடிபொருள்களைப் பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 435-இன் கீழும் அச்சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருக்கிறார்.

இச்சம்பவத்தில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும், ஆபத்தான வெடிபொருள்களின் பயன்பாடும் வைத்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில், மறைக்காணியின் பகுப்பாய்வு, பொது மக்களின் சாட்சி வாக்குமூலம், தடயவியல் பரிசோதனைகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விசாரணை நடத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)