Ad Banner
 பொது

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் டீசலை வைத்திருந்த நிறுவன உரிமையாளருக்கு அபராதம்

06/01/2026 06:03 PM

ஈப்போ, ஜனவரி 06 (பெர்னாமா) -- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் டீசல் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட போக்குவரத்து நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு 15 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்ட சீன் வெய் சின் வின்சென்ட்டுக்கு எதிராக நீதிபதி ஐனுல் ஷாஹ்ரின் முஹமட் அத்தீர்ப்பை வழங்கினார்.

அபராதத்தைச் செலுத்த தவறினால் அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு பொருள்களுக்கான அனுமதி பாரத்தைக் கொண்டிருந்த அவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்ற தவறியதோடு அனுமதிக்கப்பட்ட 2,000 லீட்டரை விட அதிகமாக 5,940 லீட்டர் டீசலை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி காலை சுமார் மணி 9க்கு பத்து காஜா மாவட்டத்தில் உள்ள தொழில்துறை பகுதியின் வின்சென்ட் சின் என்டர்ப்ரிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வளாகத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் 1961ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டம் செக்‌ஷன் 22(1)இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

இதனிடையே குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 15 ஆயிரம் ரிங்கிட் அபராதம் உட்பட எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருள்களையும் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கே.பி.டி.என் மூலம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்ட லாரியை அசல் உரிமையாளரிடம் திருப்பித் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)