புத்ராஜெயா, 05 ஜனவரி (பெர்னாமா) -- ஆரம்பப்பள்ளி தொடங்கி ஆறாம் படிவ மாணவர்கள் வரை, சராசரியாக, அனைவருக்கும் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் BAP எனப்படும் பள்ளி தவணைக்கான தொடக்கக்கட்ட உதவித் தொகைக்காக இவ்வாண்டு அரசாங்கம் 80 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது.
அந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு பெற்றோர் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த உதவித்தொகை ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி ஆசிரியர்கள் மூலம் பெற்றோருக்கு நேரடியாக வழங்கப்படும் அதேவேளையில், தங்கள் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கேட்டறிவதற்கான தளமாகவும் இச்சந்திப்பு அமையும் என்று பிரதமர் விவரித்தார்.
அதுமட்டுமின்றி, நாட்டில் பழுதடைந்த இஸ்லாமிய சமயப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 20 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
''இந்தப் பள்ளிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, (JAKIM) கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாடத்திட்டம், கல்வித் தரம், ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துங்கள். அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் இப்பள்ளிகளில் உள்ள வசதிகளை மேம்படுத்த நாங்கள் நிதி வழங்குகிறோம். இது ஆயிரக்கணக்கானவர்களைச் சென்றடைகிறது. மக்களின் சமயப் பள்ளிகள் மற்றும் தஹ்ஃபிஸ் மற்றும் பிறவற்றிற்கு நாங்கள் உதவுகிறோம்,'' என்றார் அவர்.
அதோடு, சீனப் பள்ளிகளுக்கு எட்டு கோடி ரிங்கிட்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஐந்து கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]