மஞ்சோங், ஜனவரி 04 (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் கட்சியின் நிலைப்பாடு உட்பட அம்னோ இளைஞர் அணியின் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட எந்தவோர் ஆலோசனையும் பரிந்துரையும் கட்சி உச்ச மன்றத்தின் பரிசீலனைக்குக் கொண்டுச் செல்லப்படும்.
நேற்று நடைபெற்ற அச்சிறப்பு மாநாட்டில் இளைஞர் அணி வெளிப்படுத்திய கருத்துக்கள் அவர்களின் உரிமை என்றாலும் அம்னோவின் இலக்கு தொடர்பான எந்தவொரு முடிவும் அக்கட்சி கட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய முன்னணியின் பொது செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்திருக்கிறார்.
''நான் அதைக் குறிப்பிட விரும்புகிறேன். அதனால்தான் இந்த சூழலில் டாக்டர் அக்மால் எந்த முடிவு எடுத்தாலும் அது அம்னோ உச்ச மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்பதை அறிந்திருக்கிறார். எனவே, அவர்களின் வற்புறுத்தல்களும் நடவடிக்கைகளும் அல்லது பரிந்துரைகளும் உயர் தரப்பிடம் அதாவது அம்னோ உச்ச மன்ற அளவில் சமர்ப்பிக்கப்படும் என்பதை அவர் அறிவார்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர்.
மேலும், கட்சிக்குள் முடிவெடுக்கும் செயல்முறை அம்னோவின் மரபுகளுக்கு ஏற்ப கூட்டாகவும் முதிர்ச்சியுடனும் மேற்கொள்ளப்படுவதாக அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான டாக்டர் சம்ரி விவரித்தார்.
நேற்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோ இளைஞர் அணியின் சிறப்பு மாநாட்டில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு உட்பட இதர விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)