கோலாலம்பூர், மார்ச் 05 - இந்து அறப்பணி வாரியங்களின் நிர்வாகம் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுவது மிகவும் சிறந்தது.
ஏனெனில், அது ஆலயக் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களின் உரிமை மற்றும் பராமரிப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்து அறப்பணி சார்ந்த நன்கொடைகள் தொடர்பான விவகாரங்கள் கூட்டரசு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் பட்டியலில், பிரிவு 15(c) கீழ் உள்ளது.
அதே நேரத்தில், நிலம் தொடர்பான விவகாரங்கள் அதே கூட்டரசு அரசியலமைப்பின் மாநில பட்டியலில் உள்ள பிரிவு 2 கீழ், மாநில அரசுகளின் அதிகார வரையறைக்குள் உள்ளதாகவும் அமைச்சு தெளிவுப்படுத்தியது.
எனவே, இந்து அறப்பணி வாரியங்களின் நிர்வாகம் சட்டபூர்வமாகவும் சீராகவும் செயல்படுவதற்கு மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியமானது.
இந்த நடைமுறை, ஏற்கனவே பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வாரியத்தை அமைக்கும் சட்டம், கூட்டரசு அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனை அமைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, எந்த மாநிலத்திலாவது இந்து அறப்பணி வாரியம் அமைப்பதற்கான அவசியம் இருந்தால், அதற்கான பரிந்துரையை, மாநில அரசுகளிடம் முன்வைக்கலாம் என்றும் அமைச்சு தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)