Ad Banner
 பொது

வெடி சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

03/01/2026 02:59 PM

நெகிரி செம்பிலான், ஜனவரி 3 (பெர்னாமா) -- நீலாய், தேசா பால்மா-வில் உள்ள ஒரு வீட்டில் சுயமாக தயாரிக்கப்பட்டவெடிபொருட்களைக் கொண்டு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆடவரின் தடுப்புக் காவல் நாளை முதல் ஏழு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் இன்றுடன் நிறைவடைவதால் 62 வயதான அவ்வாடவரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு உத்தரவை மாஜிஸ்திரேட் சாரா அஃபிகா சுல்கிப்லி இன்று சிரம்பான்  துவான்கு ஜாஃபர் மருத்துவமனையில் வழங்கினார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307 மற்றும் 435 வெடிப்பொருட்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட ஆயுத சட்டம் செக்‌ஷன் 4-கின் கீழ் தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவே அவ்வாடவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி ஹமட் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி காலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் முகம், உடல், கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்களுடன் டிசம்பர் 27-ஆம் தேதி மாலை மணி 4.15 அளவில் நீலாய் பாதாங் பெனார்  வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், கைது செய்யப்பட்ட ஆடவருக்கு வெடிபொருட்கள் தயாரிப்பதில் தொழில்நுட்ப அறிவும் சிறப்புத் திறனும் இருப்பது தெரியவந்தது.

அவ்வாடவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)