சுங்கைப்பட்டாணி, டிசம்பர் 28 (பெர்னாமா) -- கிருஸ்துமஸ் பண்டிகையின் போது அன்பை பரிமாறிக் கொள்வதோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதன் வழி முழுமையான மகிழ்ச்சியை உணர முடியும்.
அந்த வகையில், கெடாவில் வசதி குறைந்த மாணவர்களின் ஆசைகளை சுங்கைப்பட்டாணி, அனைத்துலக Regent பள்ளி RISSP நிறைவேற்றியுள்ளது.
கூலிம் St. Vincent de Paul சமூகம், Bethel Assembly தேவாலயம், சுங்கைப்பட்டாணி கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி, சுங்கை பத்து தமிழ்ப்பள்ளி மற்றும் Taman Keladi தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 101 மாணவர்கள் தங்களின் ஆசைகளை அட்டைகளில் எழுதி அனைத்துலக Regent பள்ளி RISSP-இடம் சமர்பித்தனர்.
மாணவர்கள் எழுதிக் கொடுத்த அட்டைகளைச் சேகரிக்க சுமார் மூன்று வாரங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், அவை RISSP பள்ளியில் உள்ள கிருஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடப்பட்டன.
அதன் வழி, அட்டைகளில் எழுதப்பட்ட பொருள்களை RISSP பள்ளியின் ஊழியர்கள், பெற்றோர், மற்றும் நண்பர்கள் அம்மாணவர்களுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
அண்மையில் நடைபெற்ற RISSP பள்ளி உடனான கிருஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் வழி மாணவர்களுக்கு அப்பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமநாதன் நாகப்பன் தெரிவித்தார்.
''ADOPT A WISH, REWRITE A STORY என்று பெயரிட்டோம். இந்நிகழ்ச்சியில் சும்பா, கேரலிங், மாணவர்களின் படைப்புகள் ஆகியவை இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிக்கு எங்களது பள்ளிக்கு சிறந்த அனுபவமாகவும் நினைவாகவும் அமைந்திருக்கிறது,'' என்றார் அவர்.
கடந்த ஆண்டும் இதே போன்று சுமார் 35 குடும்பங்கள் மற்றும் 55 சிறார்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக ராமநாதன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)