காப்பார், டிசம்பர் 28 (பெர்னாமா) -- ஆன்மிக வழிபாடுகளுக்கு உகந்த மாதமான மார்கழியில் முருகப் பெருமானைப் போற்றி பாடுவதற்காகச் சிலாங்கூர் காப்பாரில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் கந்த சஷ்டி கவச பாராயண விழா நடைபெற்றது.
இன்று காலை மணி 7 அளவில் நடைபெற்ற பூஜைக்குப் பின்னர் ஆலய தேவார குழுவுடன் பொது மக்களும் இணைந்து தொடர்ந்து 36 முறை கந்த சஷ்டி கவசம் பாடுவது இவ்விழாவின் தனிச்சிறப்பாக அமைந்தது.
இன்றைய தலைமுறையினரிடம் சமய நெறியையும் ஆன்மிக சிந்தனையையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாலயத்தில் இரண்டாம் ஆண்டாகக் கந்த சஷ்டி கவசம் பாராயண விழா நடத்தப்படுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
''சமய நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருவதால் சமய நெறியோடு பிள்ளைகள் வளரக்கூடும் ஆகையால் தீய வழியில் செல்ல இயலாது. எனவே, அவர்களுக்கு அந்த ஆன்மீக உணர்வை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்படுகிறது'' என்றார் ஏற்பாட்டு குழுத் தலைவர் மகேந்திரமணி கோவிந்தசாமி.
''கந்தர் சஷ்டி கவசம் நமக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம். இந்தக் கவசத்தை அனைவரும் பாடவில்லை என்றாலும் பிறர் பாடுவதைக் காதால் கேட்டு நன்மை அடையலாம். அதற்காகவே இந்தக் கவசத்தை 36 முறை தொடர்ந்து பாடும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்'' என்றார் ஒருங்கிணைப்பாளர் அருள்மணி அண்ணாமலை.
இந்த பாராயண விழாவில் பங்கேற்று பாடியவர்களில் சிலர் தங்களின் அனுபவத்தையும் சமய நிகழ்ச்சிகளால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
''மார்கழி மாதத்தில் திருஎழுச்சி மற்றும் திருவெண்பா போன்ற பாடல்களைப் பாடிக்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில், முருகனுக்கு அர்ப்பணிப்பாகக் கந்தர் சஷ்டி கவசம் மற்றும் திருப்புகள், அம்பாளுக்கு அர்ப்பணிப்பாக அபிராமி அந்தாதி, மேலும், திருமுறை பாடல்கள், பதிகங்கள் அனைத்தையும் பாடுகிறோம். இதனால் எனக்குப் பெரும் ஆன்மிக நன்மை கிடைக்கிறது. எனவே, இளைஞர்கள் திருமுறையைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் செறிவூட்டப்பட்டு கட்டொழுங்காக வளர்ந்து ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும்'', என்றார் பங்கேற்பாளர் தரணிபிரியா மகேந்திரமணி.
''இத்தகைய தேவார வகுப்புகளில் கலந்து கொண்டால் மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் வாழ முடியும். திருமுறை படித்து யாரும் கெட்டுப்போனதாக வரலாற்றில் காணப்படவில்லை. ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேவார வகுப்புகளில் சேர்க்க வேண்டும்'', என்றார்பங்கேற்பாளர் திரெசா முத்துவீரன்.
''தேவாரம் என்பது சிறு வயதிலிருந்தே நம்மை செதுக்கக்கூடிய ஒன்று. நம் மனநிலையை ஒருநிலைப்பத்தி நல்வழியில் செல்ல வழி தருகிறது. அதுமட்டுமல்லாமல், நிறைய சாதனைகள் படைப்பதற்க்கு உறுதுணையாக இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் மறவாமல் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள ஆலயத்திற்க்கு அனுப்பி தேவார வகுப்பில் சேர்த்து சிறுவயதில் இருந்து அவர்களுக்குப் போதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'', என்றார் பங்கேற்பாளர் செல்வி.
தொடர்ந்து 36 முறை கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கு ஏழு மணி நேரங்கள் ஆகும் நிலையில் இந்த பாராயண விழா இரவு மணி 7.30 அளவில் முருகப் பெருமானின் சிறப்பு பூஜையுடன் நிறைவடையும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)