Ad Banner
Ad Banner
 பொது

வெடிப்பொருள் வெடிப்பு; தடுப்புக் காவலில் ஆடவர்

28/12/2025 04:35 PM

சிரம்பான், 28 டிசம்பர் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், நீலாய், டேசா பல்மா பகுதியில் சுயமாக தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள், ஐ.ஈ.டி வெடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் வரும் ஜனவரி மூன்றாம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தினால் காயங்களுக்கு ஆளான 62 வயதுடைய அவ்வாடவருக்கு மூத்த துணைப் பதிவாளர் சித்தி நூர் அயின் அரிஃபின், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில் அந்தத் தடுப்புக் காவல் உத்தரவை வெளியிட்டதாக, நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சஃப்னி அஹ்மாட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307 மற்றும் 435 உட்பட திட்டமிடப்பட்ட ஆயுதங்கள் வெடி பொருள்கள் சட்டம் செக்‌ஷன் நான்கின் கீழ் விசாரணையை மேற்கொள்ள இத்தடுப்புக் காவல் வழிவகுக்கும் என்று டத்தோ அல்சஃப்னி கூறினார். 

முகம், உடல், கை கால் பகுதிகளில் தீக் காயங்களுக்கு ஆளான அவ்வாடவர், நீலாய், பத்தாங் பெனார் பகுதியில் நேற்று மாலை மணி 4.15-க்கு கைது செய்யப்பட்டதாகவும் அவ்வாடவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

'அயாங்' என்றழைக்கப்படும் அச்சந்தேக நபர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சாதனங்கள் மற்றும் உபகரணங்களை அடிப்படையாகக் கொண்டு, வெடிபொருட்களை தயாரிப்பதில் தொழில்நுட்ப அறிவு மற்றும் சிறப்புத் திறன்களை அவர் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]