Ad Banner
Ad Banner
 பொது

கைகலப்பில் ஈடுபட்ட சிங்கப்பூர் பிரஜைகள் குற்றம் சாட்டப்பட்டனர்

24/12/2025 05:26 PM

ஜோகூர் பாரு, டிசம்பர் 24 (பெர்னாமா) -- ஜாலான் செரிகலாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கைகலப்பில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் சிங்கப்பூர் கலைஞர் ஒருவரும் ஜோகூர் பாருவில் உள்ள இரு வெவ்வேறு மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டனர்.

எனினும் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயதுடைய சுவா சின் ஹெங் 55 வயதுடைய லோ சௌ பெங் மற்றும் 27 வயதுடைய ஆக்ஸ்எல் சுவா கை ஜூன் ஆகிய மூவரும் மஜிஸ்திரேட் ஏ. ஷர்மினி முன்னிலையில் மொழிப்பெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை மறுத்தனர்.

அதேவேளையில் மஜிஸ்திரேட் நபிலா நிசாம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட தனக்கெதிரான குற்றச்சாட்டைச் சிங்கப்பூர் கலைஞரான 46 வயதுடைய பி. சுரேஷ் ஒப்புக்கொண்டார்.

டிசம்பர் 21ஆம் தேதி மாலை மணி 5.17க்குச் சம்பந்தப்பட்ட அந்த பேரங்காடியில் பி. சுரேஷிக்குக் காயங்கள் உண்டாகும் அளவிற்கு வேண்டுமென்றே அவரைத் தாக்கியதாக சுவா, லோ மற்றும் ஆக்ஸ்எல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதோடு, அதே இடத்தில் சுவாவிற்குக் காயங்கள் உண்டாகும் அளவிற்கு அவரைத் தாக்கியதாக பி. சுரேஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது அதிகபட்சம் 2,000 ரிங்கிட் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 323 மற்றும் அதனுடன் வாசிக்கப்பட்ட அதேச் சட்டம் செக்‌ஷன் 34இன் கீழ் அந்த நால்வர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அம்மூவரும் தலா 5,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட வேளையில் ஜனவரி 27ஆம் தேதிக்கு இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்க்கு 1,500 அபராதம் விதிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)