Ad Banner
Ad Banner
 உலகம்

துருக்கி: மழைப்பொழிவு குறைவதால் அதிகரிக்கும் புதைகுழிகள்

24/12/2025 07:53 PM

கோன்யா, டிசம்பர் 24 (பெர்னாமா) -- துருக்கியின் மத்திய விவசாயப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்து நிலத்தடி நீர் குறைந்து வருவதால் நூற்றுக்கணக்கான புதைகுழிகள் உருவாகியுள்ளன.

இது விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பருவநிலை மாற்றத்தின் கவலைக்குரிய அறிகுறியாக அவர்கள் இதனை கருதுகின்றனர்.

கோன்யா மாகாணத்தின் கரப்பினாரில் மக்காச்சோளம், கோதுமை மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு விளையக்கூடிய விவசாய நிலங்களில் புதைகுழிகள் உருவாகி இருக்கும் வேளையில் விவசாய நிலம் ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட புதைகுழிகள் உருவாகியுள்ளன.

முன்பு தண்ணீரால் நிரப்பப்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள பழைய புதைகுழிகள் பெரும்பாலும் தற்போது வறண்டுவிட்டன.

2000ஆம் ஆண்டுகளிலிருந்து உலகம் முழுவதையும் பாதித்து வரும் பருவநிலை மாற்றம் மற்றும் வறட்சியே இந்த புதைக்குழிகள் அதிகரிப்பிற்கான காரணம் என்று அந்நாட்டின் புவியியல் பேராசிரியர் ஃபெத்துல்லா அரிக் Arik கூறினார்.

இந்த வறட்சியின் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வறட்சி மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் உள்ளூர் விவசாயிகள் அதிக கிணறுகள் தோண்டத் தொடங்குகின்றனர்.

அவற்றில் பல உரிமம் பெறாதவை.

இதனால் நிலத்தடி நீர் மேலும் குறைந்து பிரச்சினையை அதிகப்படுத்துகின்றது.

புதிய புதைகுழிகள் இதுவரை எந்த உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவற்றின் கணிக்க முடியாத தன்மை உள்ளூர்வாசிகளின் உயிர்களையும் உடமைகளையும் ஆபத்தில் ஆழ்த்துவதாக ஃபெத்துல்லா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)