பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 19 (பெர்னாமா) -- பெட்டாலிங் ஜெயா, பன்டார் உதமா-வில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கை முடிவை தெரிந்துகொள்ள, அடுத்தாண்டு ஜனவரி 16-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
பேராக், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையிலிருந்து அப்பரிசோதனை அறிக்கையைப் பெறும் கால அவகாச நீட்டிப்பிற்கு அனுமதியளித்தப் பின்னர், மஜிஸ்திரேட் அமிரா சரியாதி ஸைனால் அத்தேதியை நிர்ணயித்ததாக, குற்றம் சாட்டப்பட்ட 14 வயது மாணவனின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் தெரிவித்தார்.
18 வயதிற்கு கீழ்ப்பட்டவரை உட்படுத்திய வழக்கு என்பதால், உள்ளரங்கு விசாரணையே நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட அம்மாணவன் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை மற்றும் மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், இன்று, அவன் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்று கிட்சன் ஃபூங் மேலும் கூறினார்.
அறிக்கையைத் தயார் செய்ய ஒருமாத கால அவகாசம் வழங்கியிருப்பதோடு, அடுத்த வழக்கு விசாரணையின்போது அது தயாராக இருக்கும் நீதிமன்றம் நம்பிக்கைத் தெரிவித்ததாக கிட்சன் ஃபூங் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன் அல்லது விசாரணையை நிர்ணயிப்பதற்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் அறிவுத் திறனை சோதிக்கும் மனநல அறிக்கை இவ்வழக்கிற்கு மிக அவசியமான ஒன்றாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அக்டோபர் 14 ஆம் தேதி காலை மணி 9.20 தொடங்கி 9.35-க்குள் அம்மாணவியை கொலை செய்ததாக, கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி அம்மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)