கோலாலம்பூர், டிசம்பர் 17 (பெர்னாமா) -- இன்று தொடங்கி நாளை வரை பல மாநிலங்களில் கடுமையான மற்றும் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங் மாநிலம், குறிப்பாக குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் ஆகிய பகுதியில் அபாய நிலையிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் மொஹமட் அனிப் தெரிவித்தார்.
பகாங்கில், ஜெரான்துட், மாரான் மற்றும் பெராவிலும் திரெங்கானுவில் டுங்குன் மற்றும் கெமாமானிலும், ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியிலும் கடுமையான தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர், கோலாலாம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களிலும் எச்சரிக்கை நிலையிலான தொடர் மழை பெய்யும் என்று டாக்டர் முஹமட் ஹிஷாம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே வானிலை குறித்த அண்மையில் தகவல்களைத் தெரிந்து கொள்ள மெட் மலேசிய அகப்பக்கம் அல்லது அதன் சமூக வலைத்தளம் ஆகியவற்றுடன் myCuaca செயலியையும் பொதுமக்கள் அணுகலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)