சஃபி, டிசம்பர் 16 (பெர்னாமா) -- மொரோக்கோவின் அட்லாண்டிக் கடற்கரை மாகாணமான சஃபியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அமலாக்கத் தரப்பினர் தெரிவித்தது.
இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட 14 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு அதில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக ஓர் அறிக்கையில் அத்தரப்பு கூறியது.
டிசம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் மொரோக்கோ தலைநகர் ராபாட்டிற்குத் தெற்குப் பகுதியில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துறைமுக நகரமான சஃபியின் பழைய நகரத்தில் வீடுகளும் கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியதோடு வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன.
மேலும், வெள்ளப் பேரிடரால் நகரத்தைச் சுற்றியுள்ள பல சாலைகளின் தொடர்பும் துண்டிக்கப்பட்டதாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளத்தால் மூழ்கிய வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளை மதிபிடவும் நேற்று அங்குள்ள பள்ளிகளும் மூடப்பட்டன.
பழைய நகரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களையும் சதுப்பு நிலத்தில் மூழ்கிய கார்களையும் மீட்புப் பணிகளில் அதிகாரிகள் படகுகளைப் பயன்படுத்துவதையும் உள்ளூர் ஊடகங்கள் பகிர்ந்த காணொளியில் காண முடிந்தது.
சஃபி பழைய நகரத்தில் உள்ள ஒரு பழங்கால வாயில் அருகே சேற்று வெள்ளத்தில் சிக்கிய ஒரு பெண் பாதுகாப்பாக மீட்கப்படுவதை உள்ளூர் செய்தி வலைத்தளம் வெளியிட்ட காணொளியில் தெரிய வந்தது.
இச்சம்பவத்தில் குறைந்தது 70 வீடுகளும் கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)