கோலாலம்பூர், நவம்பர் 06 (பெர்னாமா) -- மருத்துவ உபகரண கட்டுப்பாட்டு நிபுணர்களை ஒன்றிணைக்கும் அனைத்துலக தளமான G-H-W-P எனப்படும் அனைத்துலக ஒருங்கிணைப்பு செயற்குழுவின் தலைவராக சுகாதார அமைச்சின் மருத்துவ உபகரண நிர்வகிப்பின் தலைமை செயல்முறை அதிகாரி முனைவர் முரளிதரன் பரமசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு வரையில், 39 நாடுகளை வழிநடத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான கட்டுப்பாடுகளை ஒருங்கிணைக்கும் அச்செயற்குழுவின் முதல் மலேசிய இந்திய தலைவர் என்று, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெருமையைச் சேர்த்துள்ளார்.
இதில் 39 நாடுகள் உட்பட உலக சுகாதார நிறுவனம், WHO மற்றும் ஆப்பிரிக்கா மருத்துவ உபகரணங்கள் மன்றம் AMDF ஆகியவையும் GHWP-இன் பார்வையாளர்களாக இருப்பதாக பேராக், தைப்பிங்கைப் பூர்விகமாக கொண்ட முரளிதரன் பரமசிவம் தெரிவித்தார்.
சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகள் தமக்கு ஆதரவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
''கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அமைப்பின் தலைவராக சீனா இருந்தது. தற்போது மலேசியாவிற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், தலைவராக என்னை நியமனம் செய்துள்ளனர்,'' என்றார் அவர்.
இப்பொறுப்பின் வழி தமக்கு நிறைய கடமைகள் மற்றும் பணிகள் இருப்பதாவும் அவற்றை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றவிருப்பதாகவும் முரளிதரன் கூறினார்.
அதோடு, 39 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து மருத்துவ உபகரணங்களுக்கான கொள்கைகள், வழிகாட்டிகள், பாதுகாப்பு தர நிலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக விளக்கினார்.
மேலும், WHO உட்பட பல முன்னேறிய நாடுகளுடன் இணைந்து மருத்துவ உபகரணத்தின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை உயர்த்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறினார்.
இதன்வழி, மலேசியாவின் மருத்துவ உபகரணத் துறை உலகளவில் அங்கீகாரம் பெறுவதற்கும் தொழில் வளர்ச்சி உயரும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனை, தமது தொழில்முறை பயணத்தின் சாதனையாக மட்டுமல்லாது இந்திய சமூகத்தின் வெற்றியாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் 4-ஆம் தேதி தாய்லாந்து, பேங்காக்கில் நடைபெற்ற GHWP-இன் 29-வது ஆண்டுக் கூட்டத்தில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)