Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனை மன்றத்தின் உறுப்பினராக இந்திய இளைஞர் டனேஷ் நியமனம்

02/12/2025 06:05 PM

கோலாலம்பூர், 02 டிசம்பர் (பெர்னாமா) -- தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனை மன்றம், எம்.பி.பி.என்-இன் உறுப்பினராக இந்திய இளைஞரான டனேஷ் பேசில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அச்செயற்குழுவில் ஒரே இளைஞராக மட்டுமல்ல; மாறாக, ஒரே இந்தியராக இடம்பெற்றிருக்கும் டனேஷ், தேசிய தளத்தில் இளைஞர்களின் குரலாக இருந்து செயல்படவிருப்பதோடு அரசாங்கக் கொள்கைகளை வடிவமைக்கும் செயல்முறையிலும் ஈடுபடுவதற்கான முயற்சியை முன்னெடுக்கவிருப்பதாக தெரிவித்தார்.

இந்திய இளைஞர்கள் தேசிய அளவிலான தளங்களில் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்றாக டனேஷின் நியமனம் விளங்குகிறது.

இந்நிலையில், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முதன்மை தளமாக விளங்கும் இம்மன்றத்தில் ஈராண்டுகளுக்கான தமது பொறுப்பு குறித்து டனேஷ் இவ்வாறு கூறினார்.

''இதன் மூலம் அதிகமான ஒருமைப்பாட்டு திட்டங்களை குறிப்பாக இளைஞர்களுக்காக நாம் கொண்டு வருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டு விவகாரத்தை விவாதிப்பதற்கான முதன்மை தளமாகவும் இம்மன்றம் திகழ்கின்றது. இவ்வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு நான் செயல்படுவேன்,'' என்றார் அவர்.

நாட்டின் ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலையான முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இளைஞர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் முக்கியப் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாக அவர் கூறினார்.

''தற்போது நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, 3R-ஐ உட்படுத்தி பல பிரச்சனைகள் உருவாகுகின்றன. அதுமட்டுமின்றி, இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமான வன்முறை கலாச்சாரமும் நிலவி வருகின்றது. இதற்கான தீர்வுகளை கலந்தாலோசித்து அவற்றை அமல்படுத்த தீவிரமாகச் செயல்படுவோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, இளைஞர்கள் மத்தியில் ஒற்றுமை, தலைமைத்துவத் திறன் மற்றும் சமுதாய மாற்றத்தை உருவாக்கும் இயக்க சக்தியாக செயல்படுவதில் தாம் உறுதிபூண்டிருப்பதாக மலேசிய இந்திய இளைஞர் மன்றம், MIYC-இன் தலைவருமான டனேஷ் குறிப்பிட்டார்.

துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃபின் தலைமையில் எம்.பி.பி.என் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]