மலாக்கா, 30 நவம்பர் (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2025 கபடி போட்டி இன்று அதிகாரப்பூர்வமாக நிறைவுப் பெற்றது.
மலாக்கா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு வளாக மண்டபத்தில், கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் 6 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றிருந்தன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை சீ மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில் மலாக்கா கபடி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேசிய கபடி சங்கம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
மலேசியாவில் 25 ஆண்டுக்கால கபடி போட்டியில் தமிழ்ப்பள்ளிகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய அளவிலான போட்டி இதுவாகும் என்று மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் பத்மநாதன் வெங்கட்ராமன் கூறினார்.
''நாங்கள் எல்லா மாநிலங்களிலும் பள்ளி அளவிலான போட்டிகளில் பள்ளி, மாநிலம் அல்லது மாவட்டம் அளவில் போட்டிகளை முடித்துவிட்டு அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லாமல் விடுகின்றனர். எனவே, நல்ல வீரர்களுக்கு ஒரு எதிர்காலம் இல்லாமல் போகின்றது. அதனால், கபடி போட்டியைத் தேசிய அளவில் நடத்தி 16 மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நோக்கில் நாங்கள் இம்முயற்சியை முன்னெடுத்துள்ளோம்'', என்றார் அவர்.
கபடி போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து நடத்தப்படும் சீ, சுக்மா, ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் மத்தியில் கபடி போட்டி தொடர்ந்து வரவேற்கப்படுவதை உறுதிச் செய்யும் வகையில் அடுத்தாண்டு 12 மற்றும் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான போட்டியை நடத்தவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக, பத்மநாதன் கூறினார்.
''இதற்கு பிறகு 12 வயது மற்றும் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி அடுத்தாண்டு முழுமையாக நடைபெறும். எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படும். அதேபோல தேசிய அளவிலான போட்டிக்கு நிறைய பயிற்றுநர்கள் வருகையளிப்பார்கள். அதேபோல மாணவர்கள் அனைவரும் சுக்மாவிற்குச் செல்வார்கள்'', என்று அவர் கூறினார்.
இதனிடையே, 6 மாநிலங்கள் கலந்து கொண்ட இக்கபடி போட்டியில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பிரிவுகளில் சிலாங்கூர் வெற்றி வாகை சூடியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)