சபா, நவம்பர் 26 (பெர்னாமா) -- 2026 இரண்டாம் காலாண்டின் இறுதிக்குள் சமூக ஊடகத் தளங்கள் eKYC எனப்படும் பயனர் அடையாள சரிபார்ப்பு முறையை அமல்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்வழி 16 வயதுக்குக் கீழ்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.
இது தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடலை நடத்தவும் பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கவும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC-க்கு அறிவுறுத்தப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''ஆஸ்திரேலியா உட்பட பிற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இங்கே அனைத்து தளங்களும் அதே மாதிரி அல்லது கிட்டத்தட்ட ஒரே வழிமுறைகளைப் பயன்படுத்த முடிந்தால், அந்த செயல்முறையை எளிதாக்கலாம் அல்லது விரைவுபடுத்தலாம். ஆனால், நாங்கள் ஒரு நியாயமான கால அவகாசத்தை வழங்குவோம்.'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கணக்குகளை முடக்குவது மற்றும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சமூக வளைத்தளங்களைப் பயன்படுத்துவது போன்ற அம்சங்களும் ஆராயப்படும் என்று அவர் கூறினார்.
சமூக ஊடகக் கணக்குகளைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக வெளிநாட்டினர் உட்பட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் கடப்பிதழ்கள் மற்றும் MyDigitalid போன்ற ஆவணங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அரசாங்கம் ஆராயும் என்று ஃபஹ்மி மேலும் விவரித்தார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது மட்டுமின்றி மோசடி நடவடிக்கைகள் மற்றும் இணைய சூதாட்டத்தைத் தடுப்பதற்காகவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)