தெமெர்லோ, 21 நவம்பர் (பெர்னாமா) -- பகாங் முகிம் காலியில் உள்ள 0.1 ஹெக்டர் நிலம், தமக்கு சொந்தமானது என்று கோரி, அந்நிலத்தின் உரிமையைப் பெறுவதற்காக 94 வயது மூதாட்டி ஒருவர் பதிவு செய்திருந்த வழக்கை, தெமெர்லோ உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அதோடு, இம்முடிவை அறிவித்த நீதிபதி ரொஸ்லான் மாட் நோர் பிரதிவாதியான ரவூப் மாவட்ட நில நிர்வாகி மற்றும் பகாங் நில மற்றும் சுரங்க இயக்குநருக்கு பத்தாயிரம் ரிங்கிட் செலவுத் தொகையை செலுத்தும்படியும் மனுதாரரான சந்திரமதி அடைக்கனுக்கு உத்தரவிட்டார்.
இரு தரப்பினரும் சமர்ப்பித்த சாட்சிகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இம்முடிவை எடுத்ததாக நீதிபதி ரொஸ்லான் கூறினார்.
செலவுகள் மனுதாரருக்கு ஒரு தண்டனை அல்ல என்றும், வாதத்தை முன்வைப்பதில் அரசு தரப்பு செய்த பணிகளை, நீதிமன்றம் கருத்தில் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் மூதாட்டி சந்திரமதியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். கங்காதரன் தெரிவித்தார்.
அதோடு, இவ்வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததன் காரணத்தை அவர் விளக்கினார்.
நீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, தமது தாயாரின் பல ஆண்டு போராட்டத்திற்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேல்முறையீடு செய்ய தயாராக இருப்பதாக சந்திரமதியின் 65 வயதான மகன் மகேஸ்வரன் கந்தசுவாமி தெரிவித்தார்.
''வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிப்போம். எனது தாயார் நிறைய போராடினார். அவருக்காக போராட நான் தயாராக இருக்கிறேன்,'' என்றார் அவர்.
உடல் நலக்குறைவினால் சந்திரமதி நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டில், 11 பிள்ளைகளுக்கு தாயாரான சந்திரமதி 0.1 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தின் உரிமை குறித்து அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2020-இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் விண்ணப்பத்தில் தகுதி இருப்பதாகக் தீர்ப்பளித்த நிலையில், வழக்கு இங்குள்ள தெமெர்லோ உயர் நீதிமன்றத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
சந்திரமதி தொடர்ந்து அங்கேயே வசித்து வந்த போதிலும், தமது நிலத்தின் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினர் ஆக்கிரமித்தாக குற்றம் சாட்டியதை, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)