கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு முதல் காலாண்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் 2025-ஆம் ஆண்டு பயனீட்டாளர் கடன் சட்ட மசோதா, இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள் எனும் பி.என்.பி.எல் போன்ற நிதி சேவை துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மலேசியாவில் 16 பி.என்.பி.எல் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் மூன்று முக்கிய நிறுவனங்கள் சந்தையில் சுமார் 90 விழுக்காட்டைக் கட்டுப்படுத்துவதாகவும், பேங்க் நெகாராவின் உதவி ஆளுநரும், சி.சி.ஓ.பி எனப்படும் பயனீட்டாளர் கடன் மேற்பார்வை வாரியத்தின் பணிக்குழு தலைவருமான அபு ஹசான் அல்ஷாரி யஹ்யா கூறினார்.
இவ்வாண்டின் முதல் பாதியில் செயலில் உள்ள பயனீட்டாளர்களின் எண்ணிக்கை, சுமார் 65 லட்சத்தை எட்டியிருப்பதால், பி.என்.பி.எல்-லின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அபு ஹசான் அல்ஷாரி தெரிவித்தார்.
"மற்றவர்களும் பி.என்.பி.எல் வணிகத்தைச் செய்கிறார்கள். ஆனால், தாக்கம் இன்னும் சிறிதாக உள்ளது. ஆனால் நான் நினைக்கின்றேன் பின்னர் விதிக்கப்படும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு இருந்தால், அது சந்தையில் நுழைவதற்கான பிற பி.என்.பி.எல்-களின் பங்கேற்பை உண்மையில் அதிகரிக்கக்கூடும் என்று", என்று அவர் கூறினார்.
வியாழக்கிழமை, பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு வருகையளித்த போது, அவர் அதனை கூறினார்.
கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி, மேலவையில் பயனீட்டாளர் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டு இறுதியில் அது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)