Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

ஆலய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் தேசிய இந்து ஆலயங்கள் செயற்குழு

13/03/2026 07:09 PM

கோலாலம்பூர், மார்ச் 13 (பெர்னாமா) -- நாட்டில் அனுமதியின்றி வழிபாட்டு தலங்கள், ஆலய இடமாற்றம் உட்பட ஆலயம் தொடர்பான பிரச்சனைகள், அண்மைய காலமாக மக்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாக இருந்து வருகிறது. 

இப்பிரச்சனைகளுக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு, நீண்ட கால திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை தேசிய இந்து ஆலயங்கள் செயற்குழு அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது.

நாட்டில் உள்ள இந்து இயக்கங்கள், ஆலயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன் வைத்தாக மலேசிய இந்து வழக்கறிஞர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் டத்தோ எஸ்.முருகேசன் தெரிவித்தார்.

நேற்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் சான் மிங் காயை சந்தித்து, செயற்குழு சார்பில், அக்கோரிக்கையுடன் இணைத்து இதர சில கோரிக்கைகளையும் முன் வைத்ததாக அவர் கூறினார்.

'''KUIL HARAM' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு பதிலாக, 'KUIL TANPA PENDAFTARAN TANAH' அல்லது KTPT என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஏனென்றால், இப்போது பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகள் இந்தியர்களின் மனதை புண்படுத்துகின்றது. இப்பொழுது சில மன்றங்கள் ஆலயங்களை அகற்றுவதற்கான நோட்டிஸ்களை வெளியிட்டுள்ளன. அதனை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டோம். ஏனென்றால், ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்ச்னைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை அதனை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, தேசிய இந்து ஆலய செயற்குழுவில் பல இந்து இயக்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

''ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான ஒரு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த செயற்குழு செயல்படுகின்றது. தேசிய அளவிலான இந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்தச் செயற்குழுவை அமைத்திருக்கின்றோம். முக்கியமாக இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், இந்து சேவை சங்கம், மலேசிய இந்து வழக்கறிஞர்கள் மன்றம் உட்பட பல இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன,'' என்றார் அவர்.

இதனிடையே, இந்திய சமுதாயத்தின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்படும் தரப்பினர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது தரப்பு கேட்டுக் கொண்டதாகவும் முருகேசன் கூறினார்.

எனவே, இச்செயற்குழுவின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிச்சயமாக செயல்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)