கோத்தா கினபாலு, 20 நவம்பர் (பெர்னாமா) -- பல்வேறு சமூகத்தினர் வசிக்கும் சபா மாநிலத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவதில் இருந்து அவர்கள் ஒருபோதும் தவறியதில்லை.
ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், 30-க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுபாண்மை சமூகத்தையும் உட்படுத்திய மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் இந்திய சமூகம் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது.
வளமான வாழ்க்கைக்கு மட்டுமல்லாது குடும்பத்தை வளர்ப்பதற்கும் சபா மாநிலம் தகுந்த இடமாக இருக்கிறது என்று சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் அம்மாநில மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் ஜி. மோகன் தெரிவித்தார்.
ஜோகூரைப் பூர்வீகமாக கொண்ட அவர், 1990-ஆம் ஆண்டு சபாவிற்கு புலம்பெயர்ந்தார்.
சண்டாகானில் உள்ள Duchess of Kent மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் போது தமக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
"இங்குள்ள மக்கள் நட்புறவுடன் பழகக்கூடியவர்கள். இனம், மதம், அரசியல் பின்னணி, கலாச்சாரம் என்று அனைத்திலும் மிக உயர்ந்த சகிப்புத்தன்மையும் கொண்டுள்ளனர்," என்றார் அவர்.
இதனிடையே, கெனிங்காவின் உட்புறப் பகுதியில் பணிக்கு நியமிக்கப்பட்டபோது சபா மீது ஓர் ஈர்ப்பு வந்ததாக, இங்கு 29 ஆண்டுகளாக வசித்து வரும் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் கிரேஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
"வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. அவர்கள் மரியாதைக்குரியவர்கள். நான் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்து சென்றவராக உணரவில்லை" என்றார் ஆசிரியர் கிரேஸ்.
தமது குடும்பத்தாருடன் இங்கு தொடர்ந்து வசிப்பதற்கு சபா சமூகத்தினரின் அன்பு ஊக்குவிப்பாக இருந்ததாக பவா பாயூவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் முன்னாள் மூத்த விரிவுரையாளர் சண்முக நாதன் தெரிவித்தார்.
"எனது பிள்ளைகளும் இங்குதான் பிறந்தனர். மூவர். அவர்களும் இதை அவர்களது மாநிலங்களாக ஏற்றுக் கொண்டனர். இங்கேயே தொடர்ந்து வசிப்பதற்கு அவர்கள் கேட்டுக் கொண்டனர்," என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டில் சபா மக்கள் தொகையில், இந்திய சமூகத்தின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது.
மாநிலத்தின் மிகச் சிறிய சமூக குழுக்களில் ஒன்றாகவும் இது அமைந்திருக்கின்றது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)