Ad Banner
Ad Banner
 உலகம்

சூரிய மின் நிலையத்தால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை மாற்றம்

15/11/2025 04:26 PM

ராஜஸ்தான், 15 நவம்பர் (பெர்னாமா) -- பிரேசிலில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சநிலை மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் ஒன்று கூடியிருக்கும் வேளையில் கிராமப்புறங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்தி இந்தியாவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள சாவார்டா எனும் ஒரு சிறிய கிராமத்தில், கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட ஒரு சூரிய மின் நிலையம், பண்ணைகளிலிருந்து வகுப்பறைகள் வரை அக்கிராம மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

ஒரு காலத்தில் மின்தடையாலும் வறண்ட வயல்களாலும் பாதிக்கப்பட்ட இக்கிராமம், சூரிய மின் நிலையத்தினால் புத்துயிர் பெற்றுள்ளது.

அக்கிராமத்தில், முன்பு தரிசு நிலங்களாக இருந்த இடங்களுக்கு தற்போது இந்த மின் நிலையத்தின் மூலம், வீடுகளுக்கும் பண்ணைகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுகின்றது.

இதனால், அக்கிராமவாசிகளின் தினசரி வாழ்க்கையும் நல்ல மாற்றம் கண்டுள்ளது

இதற்கு முன்னர் இருளிலும் வெப்பத்திலும் வாழ்ந்து வந்த அக்கிராம மக்கள் தற்போது சூரிய மின் நிலையத்தின் உதவியினால் விடியல் பிறந்துள்ளதாக நிம்மதி தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் தண்ணீர் குழாய்கள் சூரிய ஒளியில் இயங்கி, பயிர்களுக்கு நீர்பாய்ச்ச உதவுவதால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நம்பகத்தன்மையற்ற நிலை மாறி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதைப் பற்றி கவலை கொள்ளாமல் விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு சரியான நேரத்தில் நீர்பாய்ச்ச முடிகிறது.

இதுபோன்ற வசதிகளுடன் இக்கிராமம் தற்போது சுத்தமான, 24 மணி நேர மின்சாரத்தை அனுபவித்து வரும் வேளையில், அது கரிம வெளியேற்றத்தைக் குறைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)