Ad Banner
Ad Banner
 பொது

புங் மொக்தார் ரடின் & அவரது துணைவியார் செய்த வழக்கு ஒத்திவைப்பு  விண்ணப்பத்திற்கு அனுமதி

13/11/2025 04:36 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த 28 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய ஊழல் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டத்தோ புங் மொக்தார் ரடின் மற்றும் அவரது மனைவி டத்தின் ஶ்ரீ சிசி இசெட்டி அப்துல் சமாட் செய்த விண்ணப்பத்திற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

இம்மாதம் 29ஆம் தேதி,17வது சபா மாநிலத் தேர்தல் நடைபெறவிருப்பதால் எதிர்தரப்பு, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு கோரி விண்ணப்பக்  கடிதத்தை அனுப்பியதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முஹமட் ஃபட்லி முஹமட் சம்ரி தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி ரோஸ்லி அஹ்மட் அம்முடிவை எடுத்தார்.

நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 3-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த விசாரணையை ஒத்திவைக்க நீதிபதி ரோஸ்லி அஹ்மட் அனுமதித்ததோடு இவ்விசாரணை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த வழக்கு விசாரனையின்போது டத்தின் ஶ்ரீ சிசி இசெட்டியின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு எதிர்தரப்பு அழைக்கும்.

PUBLIC MUTUAL நிறுவனத்தில் 15 கோடி ரிங்கிட் முதலீடு செய்வதற்கு ஃபெல்க்ராவின் அங்கீகாரத்தைப் பெற 22 லட்சம் ரிங்கிட்டையும் இரண்டு லட்சத்து 62,500 ரிங்கிட்டையும் கையூட்டாகப் பெற்றதாக 2019-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி புங் மொக்தார் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

தமது கணவருக்கு உடந்தையாக இருந்ததாக சிசி இசெட்டியும் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)