புக்கிட் மெர்தாஜாம், 17 நவம்பர் (பெர்னாமா) -- 17வது சபா மாநிலத் தேர்தலில் தமது தரப்பும் தேசிய முன்னணியும் வீழ்வதைக் காண விரும்பும் பல தரப்புகளின் இலக்காகத் தாம் தற்போது இருப்பதை உணர்வதாகச் சபா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் கூறியிருக்கின்றார்.
தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அத்தொகுதி தற்போது எதிர்க்கட்சிகளின் இலக்காக உள்ளதாகவும் அந்த சட்டமன்றத்தில் தாம் வீழ்வதை உறுதி செய்ய எதிர் தரப்பினர் அனைத்து கேந்திரங்களையும் முடுக்கி விட்டிருப்பதாக லாமாக் மாநில சட்டமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளருமான புங் மொக்தார் தெரிவித்தார்.
16வது சபா மாநிலத் தேர்தலில் மாநில அம்னோ தலைவருமான புங் மொக்தார் லாமக் சட்டமன்றத் தொகுதியில் ஐம்முனை போட்டியில் 661 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அரசியல் எதிரிகளுடன் மோதினாலும் லாமாக் மற்றும் பிற 44 சட்டமன்றத் தொகுதிகளிளும் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்புகளில் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
''கடவுள் அருளால், லாமாக் வாக்காளர்கள் தொடர்ந்து தேசிய முன்னணியைத் தேர்வு செய்வார்கள் என்று நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால், நான் அதில் என் முழு ஆற்றலையும் செலுத்தியுள்ளேன். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் கேந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின்.
கடந்த பொதுத் தேர்தலில் புதிய தொகுதிகளாக உருவாக்கப்பட்ட 13 புதிய இடங்களில் லாமாக்கும் ஒன்றாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)