கோலாலம்பூர், 12 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வாரம் ஒரு உணவகத்தின் முன்புறத்தில் போலீஸ் உறுப்பினர்களின் பணியைத் தடுக்க முயற்சித்ததற்காக 'இன்ஸ்பெக்டர் ஷீலா' என்றழைக்கப்படும் போலீஸ் அதிகாரி மீது இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் ஐனா அஸாரா அரிஃப்பின் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 37 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலா அல்லது ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார் என்பவர் அதை மறுத்து விசாரணைக் கோரினார்.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, இரவு மணி 8.15 லிருந்து 8.30-க்குள் டாங் வாங்கி, ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள உணவகம் ஒன்றின் முன்புறத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 37 வயதான லான்ஸ் கோப்ரல் மெல்வின்டர்ஜிட் சிங் தீராத் சிங்கை அவரின் பணியைத் தொடர விடாமல் தடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 186-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
6,600 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)