Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.பி.ஆர்.எம்-இல் 1,022 ஊழல் புகார்கள்; 79 பி.டி.ஆர்.எம்-ஐ சேர்ந்தவர்கள்

12/11/2025 05:55 PM

கோலாலம்பூர், 12 நவம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் மிடம் புகாரளிக்கப்பட்ட ஆயிரத்து 22 ஊழல் வழக்குகளில் 79 அரச மலேசிய போலீஸ் படை பீ.டி.ஆர்.எம் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவை.

அப்படையில் நேர்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு கவனமும் தொடர் நடவடிக்கையும் தேவைப்படுவதை, அந்த எண்ணிக்கை புலப்படுத்துவதாக
தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

பீ.டி.ஆர்.எம் உறுப்பினர்களுக்கு நேர்மைக் கலாச்சாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தவும், தவறான செயல்களிலும் சேவை நெறி மீறல்களிலும் இருந்து அப்படை சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்ய உள்கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நினைவூட்டலாகவும், அந்த விவகாரம் இருப்பதாக டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் தெளிவுப்படுத்தினார்.

''நாட்டின் முக்கிய அமலாக்க நிறுவனமாக, ஒவ்வொரு செயலிலும் முடிவிலும் நேர்மையே முக்கிய மையமாக இருப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில்.

ஊழல் சம்பந்தப்பட்ட 47 வழக்குகள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக திறக்கப்பட்ட 1,523 ஒழுங்கு விசாரணை அறிக்கைகளை நேர்மை மற்றும் தர இணக்கத்துறை JIPS பதிவு செய்துள்ளதாகவும் முஹாமட் காலிட் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், பீ.டி.ஆர்.எம்  கல்லூரியின் உழல் எதிர்ப்பு மற்றும் நேர்மை மாதக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)