ஜாலான் பார்லிமன், 12 நவம்பர் (பெர்னாமா) -- செய்திகள் அல்லது கட்டுரைகள் வெளியிடப்படுவதில் ஊடக சுதந்திரம் எப்போதும் மதிக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கைகளுடன் உடன்படாவிட்டாலும் அரசாங்கம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது.
அதேவேளையில் அவற்றுக்கு அழுத்தமும் கொடுக்காது என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
''பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மடானி அரசாங்கத்தின் நிலைப்பாடு ஊடக சுதந்திரத்தை மதிப்பதாகும். ஆகவே சில கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அல்லது சற்று திருப்திகொள்ளாவிட்டாலும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறோம். அதோடு ஒவ்வொரு முறையும் விளக்கமளிக்க அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே மடானி அரசாங்கத்தின் மிகப் பெரிய வேறுபாடு என்று நான் நினைக்கிறேன்,'' என்று தியோ நி சிங் கூறினார்.
இணையத்தில் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் 263 போலி கணக்குகள் உள்ளதாக மலேசியாகினி செய்தி தளத்தின் அறிக்கைகள் குறித்து பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மட் ஃபட்லி ஷாரியின் மக்களவையில் எழுப்பியக் கூடுதல் கேள்விக்குத் தியோ அவ்வாறு பதிலளித்தார்.
மேலும், எந்தவொரு போலி தகவல்களையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சி, வெற்றி மற்றும் உண்மைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தகவல் துறை ஜப்பான் தொடர்ந்து பகிர்ந்து வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)