கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் சமூக நலத்துறை வழியாக நாடு முழுவதிலும் உள்ள 562,116 பேருக்கு 203 கோடி ரிங்கிட்டில் சமூகநல உதவி வழங்கப்பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டில் இந்த உதவியைப் பெற்ற 550,416 பேரைக் காட்டிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
மேலும், இது பாதிக்கப்படக்கூடிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் கடப்பாட்டையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கான உதவி, மூத்த குடிமக்களுக்கான உதவி, BWE மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான அலவன்ஸ், படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பிற்கான உதவி, கூட்டரசு பொது உதவி உட்பட 11 நிதியுதவி திட்டங்களை அது உள்ளடக்கியுள்ளது.
''தகுதியுள்ள மற்றும் தேவைப்படும் இலக்கிடப்பட்ட குழுக்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடர உதவவும், அவர்களின் சுமையைக் குறைக்கவும் சமூகநலத்துறை, ஜே.கே.எம் வழியாக இந்த நிதியுதவி ஏற்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. அவர்கள் சுயமாக தங்களின் வாழ்க்கையைத் தொடர்வதற்கான ஆற்றலைப் பெறும் வரையில், இந்த உதவி தற்காலிகமாக வழங்கப்படுகிறது,'' என்றார் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி.
அந்த உதவியைப் பெறுபவர்களில் 52 விழுக்காட்டினர் பெண்கள். அதேவேளையில், இந்த உதவியை அதிகம் பெறுபவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். அவர்களில் BWE பெறும் 248,831 பேரும் அடங்குவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)