கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் தற்போது பதிவு செய்திருப்பது, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மடானி அரசாங்கத்தின் கீழ் சீர்திருத்தங்களின் செயல்திறன் ஆகியவற்றில் அனைத்துலக சந்தையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
நேர்மறையான கடன் மதிப்பீடுகள் மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் இச்செயல்திறனுக்கு துணைபுரியும் வேளையில், மடானி பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு அதற்கான நேர்மறை விளைவுகள் தென்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மானிய இலக்கு, பற்றாக்குறை குறைப்பு மற்றும் பொது நிதிச் சட்டம் உள்ளிட்ட நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் சந்தை நம்பிக்கையை வெற்றிகரமாக மீட்டெடுத்ததோடு, நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.
2024-ஆம் ஆண்டில், அந்நிய நேரடி முதலீடு, மொத்தம் 3,842 கோடி ரிங்கிட்டை எட்டியதாக டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
"ரிங்கிட் வீழ்ச்சியடைகிறது, ரிங்கிட் வீழ்ச்சியடைகிறது. இப்போது ரிங்கிட் வலுவடைந்துள்ளது; ஆனால், அது குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதுதான் பிரச்சனை. எனவே இப்போது, இன்று 1 டாலருக்கு, 4 ரிங்கிட் 16 சென் உள்ளது. ஆசியாவில் சிறப்பாக இருக்கும் நாணயம். அதன் மதிப்பு எங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. நேர்மறையாக இருக்கும் கடன் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்படுகிறது," டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இன்று மக்களவையில், ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அமொனோல்ஹுடா ஹசான் எழுப்பியக் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)