Ad Banner
 பொது

'HONG THAI INHALER' விற்பனைக்கு மலேசியாவில் தடை

07/11/2025 07:08 PM

புத்ராஜெயா, 6 நவம்பர் (பெர்னாமா) -- "Hong Thai Inhaler” எனும் மூலிகை பொருள் நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமலாக்கத் தரப்பிடம் பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டிருப்பதோடு அதனை மலேசியாவில் விற்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான கிருமிகளால் மாசுபட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இப்பொருள் மீட்டுக் கொள்ளப்பட்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணைய வர்த்தக தளங்களில் அப்பொருள் விற்கப்படுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை விற்கும் வியாபாரிகளின் வர்த்தக தளத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தொடர் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்திருக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையாளர்கள் அப்பொருளை விற்பனை செய்யும் மொத்தம் 335 விளம்பரங்கள் கண்டறியப்பட்டன.

அந்த மூலிகைப் பொருளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொது மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு சந்தேகத்திற்குரிய பக்க விளைவுகள் அல்லது அறிகுறிகள் எதுவும் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)