ஜாலான் பார்லிமன், 4 நவம்பர் (பெர்னாமா) -- நிர்ணயிக்கப்பட்ட பயண நிபந்தனைகளைப் பொருத்து, பூடி மடானி ரோன்95 திட்டம், பூடி95-இன் தகுதி வரம்பை தகுதியுள்ள இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு, மாதத்திற்கு 800 லிட்டராக அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில், இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் செய்த மேல்முறையீடுகளை அரசாங்கம் ஆராய்ந்த பின்னர், இம்முடிவு எடுக்கப்பட்டதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த மாதம் மிகவும் தீவிரமாக இ-ஹெய்லிங் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களுக்கு கூடுதல் தகுதி வரம்பை அதாவது மாதத்திற்கு 300-இல் இருந்து 600 லிட்டராக அரசாங்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து 58,000 ஓட்டுநர்கள் பயனடைவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
“அதே நேரத்தில், இலக்கிடப்பட்ட பெட்ரோல் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட ரோன்95-ஐ பெற தகுதியுள்ள வாகனங்களில் விமான நிலையத்திற்கான டாக்சிகளையும் பட்டியலிட அரசாங்கம் ஒப்புக் கொண்டது," என
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரோன்95 உதவித் தொகைக்கு உட்படுத்தப்பட்ட இலக்கிடப்பட்ட திட்டத்தை அமல்படுட்திய முதல் மாதத்தின் முன்னேற்றம் மற்றும் BUDI95-இன் கீழ் விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள், இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மற்றும் ஆற்று படகு பயனர்களின் தகுதி தொடர்பாக எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, புக்கிட் பென்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷ்செர்லீனா அப்துல் ராஷிட் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)