கோலாலம்பூர், 3 நவம்பர் (பெர்னாமா)-- இவ்வாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 266 கோடி ரிங்கிட் அல்லது 133 கோடி லிட்டர் ரோன்95 பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதன் வழி ஒரு கோடியே 65 லட்சம் மலேசியர்களில் ஒரு கோடியே 31 லட்சத்திற்கும் அதிகமானோர் அதாவது சுமார் 80 விழுக்காட்டினர் BUDI மடானி ரோன்95 திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.
முதல் மாதத்தில் சீராக அமல்படுத்தப்பட்ட BUDI95 எந்த சிக்கலுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்பட்டதோடு பெட்ரோல் நிலையங்களிலும் பயனீட்டாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவில்லை என்று லிம் ஹூய் யீங் தெரிவித்தார்.
''BUDI95 செயல்முறை மிகவும் விரைவாகவும் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும் அரசாங்கம் தொடர்ந்து சீரமைப்புகளைச் செயல்படுத்தும். உதாரணத்திற்கு, BUDI95 உதவித் தொகைக்கு தகுதியானவர்களின் தரவுகளில் ஆற்றுப் படகு ஓட்டுநர்களையும் அரசாங்கம் இணைத்துள்ளது. மேலும், இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு கூடுதல் தகுதி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.'' என்றார் நிதி துணை அமைச்சர் லிம் ஹூய் யீங்.
இன்று மக்களவையில் ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை அமலாக்கம் குறித்து கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமின் எழுப்பிய கேள்விக்கு லிம் ஹூய் யீங் அவ்வாறு பதிலளித்தார்.
எந்தவொரு பிரிவினரும் உதவித் தொகையைப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இலக்கை பராமரிப்பதோடு மட்டுமல்லாது தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் துல்லியமாக சென்றவதற்கும் இந்நடவடிக்கை முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)