கிள்ளான், நவம்பர் 1 (பெர்னாமா) -- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, 983 தரை மற்றும் கடல்சார் உபகரணங்களை உட்படுத்தி 15,620 உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தவுள்ளது.
இந்த வடகிழக்கு பருவமழை, இம்மாத மத்தியிலிருந்து அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில், நாடு முழுவதும் 3,683 வெள்ள அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிலையங்களில் தளவாட அம்சங்கள் உட்பட முழுமையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்துறை தலைமை இயக்குநர் டத்தோ செரி நுர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வெள்ள அபாயப் பகுதிகள் பதிவாகியுள்ளன.
அவற்றில், பகாங்கில் 760, கிளந்தானில் 618, திரெங்கானுவில் 460 பகுதிகள் பதிவாகியுள்ளதாக நுர் ஹிஷாம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சபாவில் 517, ஜோகூரில் 343, பேராக்கில் 280 மற்றும் நெகிரி செம்பிலானில் 123 இடங்கள், வெள்ள அபாயப் பகுதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதில், அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால், இம்முறை தங்கள் தரப்பு அப்பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)