காஜாங், 31 அக்டோபர் (பெர்னாமா) -- செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில், அரச மலேசிய சுங்கத்துறை ஜே.கே.டி.எம் மொத்தம் 5 ஆயிரத்து 700 கோடி ரிங்கிட் வரி வருவாயை வசூலித்துள்ளது.
நிதியமைச்சு நிர்ணயித்த தொடக்கநிலை கணிப்புத் தொகையான 5 ஆயிரத்து 462 கோடி ரிங்கிட்டைக் காட்டிலும், இந்த அடைவுநிலை உயர்வானது என்று ஜே.கே.டி.எம் தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முஹமட் சைனுடின் தெரிவித்தார்.
திட்டமிடல் மற்றும் அண்மைய வசூலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், 238 கோடி ரிங்கிட் கூடுதலாக உள்ளதோடு, 104.36 விழுக்காட்டு சாதனை விகிதத்தையும் அடைந்துள்ளதாக டத்தோ அனிஸ் கூறினார்.
"இருப்பினும், 2026 வரவு செலவுத் திட்ட தாக்கலுக்கு முன்னதாக, ஒரு மறுசீரமைப்பை நாம் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் 2026 வரவு செலவுத் திட்ட தாக்கலின் போது ஏற்கனவே புதிய இலக்காக 7,326 கோடி ரிங்கிட் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த புதிய இலக்கை அடைய நாங்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறோம்," டத்தோ அனிஸ் ரிசானா முஹமட் சைனுடின் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் கூடுதலான இலக்குகளின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் சுங்கத் துறையின் அனுபவத்தின் அடிப்படையில் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உருவாக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கை அமைந்துள்ளதாகவும் டத்தோ அனிஸ் ரிசானா குறிப்பிட்டார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)