கோலாலம்பூர், அக்டோபர் 24, (பெர்னாமா) -- வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் லோ தாயேக் ஜோ அல்லது ஜோ லோ மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அது இன்னும் நிறைவடையவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.அவ்விவகாரம் தொடர்பில், அரச மலேசிய போலீஸ் படை, பி டி ஆர் எம் அதன் அண்மைய நிலவரங்களை பரிசீலித்து வருவதாகவும், விசாரணையின் தேவைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜோ லோ மீதான விசாரணையின் அண்மைய நிலவரம் குறித்து செய்தியாளர்கள் வினவியபோது அவர் அவ்வாறு பதிலளித்தார்.
ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம், 1எம்டிபி நிதி மோசடியில் தொடர்புடைய விசாரணைகளில் உதவுவதற்காக ஜோ லோவை அமலாக்கத் தரப்பினர் தேடுகின்றனர்.
முன்னதாக, ஜோ லோ சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஓர்உயர்தர பகுதியில் போலி ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்தி வசித்து வருவதாக கூறப்பட்டது.
ஆனால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜோ லோ தற்போது எங்கு இருக்கிறார் என்பதற்கோ அல்லது அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கடப்பிதழ் தொடர்பான உறுதியான ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாய்ஃபூடின் நசுதியொன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)