Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா-இந்தியா இடையே நல்ல உறவு உள்ளது - டிரம்ப்

22/10/2025 08:09 PM

வாசிங்டன் டி.சி., 22 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்பு கொண்டுள்ளார்.

தங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் பெரும்பாலும் வர்த்தகத்தைச் சார்ந்திருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

"சரி, நாங்கள் [அமெரிக்கா-இந்தியா உறவுகள்] சிறப்பாக இருக்கிறோம். நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். நமது நாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்களில் நாம் பணியாற்றி வருகிறோம். நான் முன்பு குறிப்பிட்டது போல் இன்று பிரதமர் மோடியுடன் பேசினேன். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அவர் ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. அவர் என்னைப் போலவே அந்தப் போர் முடிவடைவதைக் காண விரும்புகிறார். ரஷ்யா-உக்ரேன் உடனான போர் முடிய அவர் விரும்புகிறார். உங்களுக்குத் தெரியும் அவர்கள் அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. எனவே அவர்கள் அதை வெகுவாகக் குறைத்துள்ளனர். தொடர்ந்து அதைக் குறைத்து வருகின்றனர்," என்று டோனல்ட் டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகையின் OVAL அலுவலகத்தில் இந்துக்களின் தீபத் திருநாள் உபசரிப்பில் கலந்துகொண்டபோது டோனல்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.

எரிசக்தித் துறை குறித்து பேசியதோடும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கட்டுப்படுத்தும் என்று மோடி தமக்கு உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறினார்.

ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாவும் சீனாவும் முன்னணி வகிக்கும் இரு நாடுகளாகும்.

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல்களுக்காக இந்தியாவை குறிவைத்து அண்மையில் டிரம்ப் விமர்சித்து அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்குக் கூடுதல் வரிகளை விதித்துள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)