Ad Banner
Ad Banner
 பொது

பள்ளியில் மாணவி பாலியல் துன்புறுத்தல் - குற்றத்தை மறுத்த நால்வர்

21/10/2025 08:10 PM

கெடா, 21 அக்டோபர் (பெர்னாமா)-- கடந்த ஜூன் மாதத்தில் பாலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் படிவ மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது தொடர்பில் இன்று சிறார் நீதிமன்றத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான்கு இளைஞர்கள் மறுத்து விசாரணை கோரினர்.

நீதிபதி ரோஹைடா ஈசக் முன்னிலையில் நடைபெற்ற அந்தரங்க விசாரணையில் 15 முதல் 17 வயதிற்குட்பட்ட மூன்று மாணவர்களுடன் அதே இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டனர். 

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சியோங்கின் பெச்ஹ சாவா செம்பனைத் தோட்டத்திலும் இடைநிலைப் பள்ளி வகுப்பறையிலும் சம்பந்தபட்ட 15 வயது இளம் பெண்ணுக்கு உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் மீது தனித் தனியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2017ஆம் ஆண்டு சிறார் மீதான பாலியல் குற்றச் சட்டம் செக்‌ஷன் 14(a) கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நால்வரும் மறுத்திருந்த நிலையில் ஒவ்வொருவரும் தலா மூவாயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. ,இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பாலியல் குற்றம் மற்றும் ஆபாச உள்ளடக்கங்களைப் பகிர்ந்ததற்காக மூன்று இடைநிலைப்பள்ளி மாணவர்களுடன் ஒரு முன்னாள் மாணவரும் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

53 வயதான புகார்தாரர் தனது 15 வயது மகளின் ஆபாசக் காணொளிப் பதிவு பகிரப்பட்டது குறித்து பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியரிடம் முறையிட்டதை அடுத்து அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)