குவந்தான், 12 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பகாங், குவந்தான் அருகே உள்ள் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிடத்தை பெறவிருப்பதாக அறிவித்தார்.
25 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்பில் 18 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் நிறுவப்படவுள்ளதை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.
ஜெராம் தோட்ட மேம்பாட்டிற்காக அப்பகுதியை நிர்வகிக்க தொடங்கிய தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றினால் எழுந்த பிரச்சனை கடந்த 25 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததாக அப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ க. நடேசன் தெரிவித்தார்.
கொள்கலனில் இயங்கும்படியும், பின்னர் தங்கள் தரப்பால் முறையான கட்டிடம் எழுப்பப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அந்நிறுவனம் வாக்குறுதி அளித்தும், இதுநாள் வரை அதற்கான எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து அப்பொறுப்பில் இருக்கும் டத்தோ நடேசன் விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து, இப்பிரச்சனைக்கு தீர்வுக் காணும் பொருட்டு தமது தரப்பு இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, கல்வி அமைச்சு உட்பட பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.
இதன் அடுத்தக்கட்ட பணியாக, குத்தகையாளர் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகவும் இன்னும் இரண்டும் அல்லது மூன்று ஆண்டுகளில் அதன் புதிய கட்டிடம் நிறுவப்படும் என்றும் நடேசன் குறிப்பிட்டார்.
கடந்த 25 ஆண்டுகளாக கொள்கலனில் இயங்கி வரும் இப்பள்ளியில் தற்போது 46 மாணவர்கள் பயிலும் வேளையில் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]