Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள் நூல் வெளியீட்டு விழா 

06/10/2025 06:23 PM

செந்தூல், 06 அக்டோபர் (பெர்னாமா) -  படைப்பாற்றல், எழுத்து துறை, பத்திரிகை உள்ளிட்ட பலவற்றில் சாதனைத் திலகமாக மிளிர்ந்து, பல நூறு படைப்பாளர்களை உருவாக்கிய, மறைந்த முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன் தனிச்சிறப்பு மிக்கவர்.

அவரின் எழுத்து பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளம் படைப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக  "முருகு சுப்பிரமணியன் நூற்றாண்டு நினைவலைகள்" என்ற தொகுப்பு நூல், நேற்று கோலாலம்பூரில் வெளியீடு கண்டது.  

முருகு சுப்பிரமணியனின் நினைவலைகள் குறித்து பல நிகழ்ச்சிகள் முன்னதாக நடைபெற்றிருந்தாலும், அவரின் ஆவணங்கள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீடு கண்டதில்லை.

எனவே, அந்த முயற்சியை மலேசிய கண்ணதாசன் அறவாரியம் முன்னெடுத்ததாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.  

"நம் நாட்டிலும் பிற நாட்டிலும் இருக்கும் பிரமுகர்கள் இந்நூலில் முரசு சுப்ரமணியனின் பெருமைகள் திறமைகள் மற்றும் அவர் ஆற்றிய பங்கினைப் பற்றிப் பகிர்ந்துள்ளனர். ஊடகத் துறையில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தமிழ்ப் பிரியர்கள் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், என்று
 டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் கூறினார்.

முருகு சுப்பிரமணியனின் கைவண்ணத்தில் உருவான எழுத்தோவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், அவருக்கு நெருக்கமானோர் அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கி இந்நூலை தாம் தொகுத்துள்ளதாக இரா.முத்தரசன் தெரிவித்தார்.

"முருகு சுப்பிரமணியனின் கைவண்ணத்தில் உருவான எழுத்தோவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், அவருக்கு நெருக்கமானோர் அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கி இந்நூலை தொகுத்துள்ளேன்," என்றார் அவர்.

இந்நூல் குறித்த கூடுதல் தகவல்கள், https://www.murugusubramaniam.org/post/ponni-magazine என்ற இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

மலேசியத் தமிழ் ஊடகத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் முருகு சுப்பிரமணியன் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை என்று அவரின் சமகாலத்து எழுத்தாளர் 'பாப்பா கவிஞர்' முனைவர் முரசுநெடுமாறன் நினைகூர்ந்தார்.

"மலேசியத் தமிழ் ஊடகத்திற்கும், இந்திய சமுதாயத்திற்கும் முருகு சுப்பிரமணியன் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை," என்று முனைவர் முரசு நெடுமாறன் பகிர்ந்து கொண்டார். 

செந்தூல், ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள், தமிழன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேலானோர் கலந்து கொண்டனர்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)