சென்னை, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் மத்திய பாப்புவா மாகாணத்தில் உள்ள நபிர் மாவட்டத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இரண்டு முதல் மூன்று வினாடிகளுக்கு நீடித்த அந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் முஹாரி கூறினார்.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், விமான நிலையத்தின் கண்ணாடிகளும் உடைந்ததாக அப்துல் முஹாரி கூறினார்.
மேலும், அரசாங்க அலுவலகத்தின் கூரை மற்றும் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததுடன், மின்சாரமும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை முழுமையாக மதிப்பிடுவதற்கு, நபிர் மாவட்ட பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (பி.என்.பி.பி) அவசர நடவடிக்கை குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அப்துல் முஹாரி தெரிவித்தார்.
தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, பி.என்.பி.பி அறிவுறுத்தியது.
மேலும், தங்களின் வீடுகளுக்குத் திரும்பும் பொதுமக்கள், அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதனிடையே, சமூக ஊடகங்களின் பரவும் போலியான வதந்திகளை எளிதில் நம்பிவிட வேண்டாம் என்றும் பி.என்.பி.பி பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)