கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- "நான் முயற்சி செய்தால் முடியும்" என்ற ஒரே நம்பிக்கையில் இருந்து தான் ஒவ்வொரு சுயத் தொழிலும் பிறக்கின்றது.
அதே நம்பிக்கையில், தேநீரின் வெப்பத்தோடும் அது பேசும் சுவையோடும் வர்த்தக உலகில் LEAFHAUS PREMIUM எனும் முத்திரையில் தமது அடையாளத்தைப் பதித்திருக்கின்றார் ஜிஸ்னவண் ஹரிகிருஷ்ணன்.
பல்கலைக்கழகம் பயிலும் காலக்கட்டத்தில் பகுதிநேரமாக 1 ரிங்கிட்டிற்கு மலாசா தேநீர் விற்பனை செய்ய தொடங்கி, இன்று அதனை புதிய முறையில் டின்களில் அறிமுகம் செய்து வர்த்தக ரீதியில் வளர்ச்சி அடைந்து வரும் ஜிஸ்னவனின் சிறப்பு நேர்காணல் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
எம்.எம்.யூ பல்கலைக்கழகத்தில் தமது இளங்கலை பட்டப்படிப்பை முடித்த ஜிஸ்னவண், அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்வதில் ஏற்பட்ட நிதி நெருக்கடியினாலும், வர்த்தகத்தில் தமக்கு ஏற்பட்ட ஆர்வத்தினாலும் தேநீர் வியாபாரத்தைத் தொடங்கியதாக கூறினார்.
பின்னர், கல்வியையும் தொழிலையும் ஒரே சமயத்தில் கவனித்த கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், 2023-ஆம் ஆண்டு டின்களில் மசாலா தேநீர் விற்கும் முயற்சியை முன்னெடுத்ததாக, அவர் தெரிவித்தார்.
''ஆக, 2023-ஆம் ஆண்டில் நான் இம்முயற்சியைத் தொடங்கினேன். மசாலா தேநீரை எவ்வாறு டின்களில் விற்பனை செய்வது. நான் ஆராய்ச்சி செய்தேன் சந்தையில் இதுபோன்று விற்பனையாகின்றதா என்று. இல்லை. பல்வேறு வகையான தேநீர்கள் டின்களில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், மசாலா தேநீர் இல்லை. ஏனென்றால், அதனை முறையாக தயாரிப்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறையாக இருந்தது'', என்றார் அவர்.
டின்களில் தயாரிக்கப்படும் மசாலா தேநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், தற்போது அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதாக 31 வயதுடைய ஜிஸ்னவண் கூறினார்.
மேலும், தரமாக, சுவையாக மற்றும் ஆரோக்கியமான முறையில் தயார் செய்து விற்பனை செய்யும் எந்தவொரு உணவும் பானமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது டிக்டாக் தளத்தில் மட்டுமே மசாலா தேநீரை விற்பனையைச் செய்து வரும் அவர், அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல, குறிப்பாக சந்தைகளில் அறிமுகப்படும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, வர்த்தகத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஜிஸ்னவண் சில ஆலோசனைகளையும் முன் வைத்தார்.
''கனவு காண்பதும் முயற்சி செய்வதும் இலவசம். எனவே, பெரிதாக கனவு காணுங்கள் நிச்சயமாக யாராவது ஒருவர் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார். உங்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து சிறிதாக கனவு காணாதீர்கள்'', என்றார் அவர்.
சுகாதார அமைச்சு, கே.கே.எம், ஹலால் மற்றும் MESTI அங்கீகாரம் கொண்டு இதுவரை மசாலா தேநீர் மற்றும் மஞ்சள் பால் என இரண்டு வகை பானங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் ஜிஸ்னவண், எதிர்காலத்தில் 24 வகையான பானங்கள் தயாரிப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)